முதுபெரும் தமிழ்த்தலைவர் சம்பந்தர் தனது 91 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 68 வருடங்களாக அரசியலில் இணைந்திருந்தார். ஆறு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். போர் முடிந்த பின்னரான தமிழரின் தலைவதிக்கு தனிக்கரமாக எழுந்து நின்று அருள்கொடுத்தார். தமிழ்க் கட்சிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒற்றைக் குரலாக தன்னை முன் நிறுத்தினார். கடந்த பதினைந்து வருடங்களாக அவரது வீட்டுக்குள் வந்திருந்தான் சிங்களமும் சர்வதேசமும் தமிழர்களை நாடி பிடித்தப் பார்த்தது. அவ்வளவுக்குச் சம்பந்தர் காலக்கண்ணாடியாக விளங்கினார். ஒரு காலத்தில் கிளிநொச்சி மைதானத்தில் அடிக்கடி வந்து இறங்கிச் சென்ற சொல்ஹேய்மின் ஹெலிக்கொப்டரைப் பார்த்து, ஏதோ பெரிதாகச் சந்திப்புக்கள் நடைபெறுவதாக - ஊடகங்களும் உலகமும் நம்பியதுபோல, சம்பந்தர் வீட்டுச் சந்திப்புக்களும் நம்பிக்கைகளை ஏற்படுத்தியது உண்மைதான்.
ஆனால், அதன் பலாபலன்களில் ஒன்றிரண்டையாவது சொல்லிவிட்டு விடைபெறும்படி, இன்று றேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் நிரந்தரமாய் உறங்கும் சம்பந்தரை எழுப்பிக் கேட்டால்கூட, அதற்கு விடை கிடைக்க வாய்ப்பில்லை.
இந்தப் பதிவு பலரைப் புண்படுத்தலாம். ஆனால், ஈழத்தமிழ் அரசியலில் ஆர்வம் கொண்ட பலர், ஏற்கனவே பல்வேறு வகைகளில் புண்பட்டிருப்பவர்களே. ஆக, இந்தப் பதிவின் காயமொன்றும் அவ்வளவாக வலித்துவிடப்போவதில்லை என்ற பொறுப்புத் துறப்புடனேயே எழுதிக்கொள்கிறேன். கூடவே, சம்பந்தருக்கான இரங்கல் செய்திகளில் வழியும் சம்பிரதாய முரண்களையும் பதிவுசெய்துகொள்கிறேன்.

பொதுவாழ்க்கையில் தங்களை முன்னிறுத்தும் எவரும், தங்களை விமர்சனங்களின் ஊடாக அணுகுவதையே விரும்புவார்கள். மட்டுமல்லாமல், அதுவே அவர்கள் பயணிக்கும் பாதைக்கான உரிய மதிப்பீடாகவும் அமையும். இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போல, தன்னை 68 வருடங்களாக அரசியலில் இணைத்துக்கொண்டவரும் - தமிழ் மக்களின் விடிவுக்காக ஓயாது உழைத்தவரும் - கடந்த பதினைந்து வருடங்களாக தமிழர்களின் ஒற்றைத் தலைவராக தன்னை முன்னிறுத்தியவருமான - சம்பந்தர் அவர்கள், தான் வாழும் காலத்தில் தன்னை ஒரு ஓய்வுபெற்ற வழக்கறிஞராகவோ குடும்பத்தலைவராகவோ பிரகடனம் செய்யவில்லை. அரசியல் ரீதியாகத் தனக்கு வழங்கப்பட்ட சகல கிரீடங்களையும் பொறுப்புடன் ஏற்றுக்கொண்டவரே. 91 வயதிலும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தபடி தமிழரின் உரிமைக்காகப் போராட முடியும் என்று தன்னை முன்னிறுத்தியவரே. தான் பெற்ற அரசியல் வெற்றிகள் தான் இல்லாக் காலத்திலும் தமிழ்மக்களுக்குப் பெரும்பேறைப் பெற்றுத் தரும் என்று திடமாக நம்பியவரே. ஆக, அவர் மீதான விமர்சனங்கள் அவரது மறைவுக்குப் பின்னர்தான் மிகக் கூர்மையாக முன்வைக்கப்படவேண்டியவை. அந்த விமர்சனங்கள்தான், அவரைப்போல தமிழர் அரசியலை அணுகியது சரியா? தவறா? தமிழர்களின் அடுத்த அரசியல் தலைமுறை, சம்பந்தரை உதாரண நாயகனாக முன் நிறுத்தலாமா, கூடாதா போன்ற பல விடைகளைத் தரும்.
பெருந்தலைவர்களின் ஆயுள், அவர்களது மறைவுக்குப் பின்னர்தான் ஆரம்பமாகிறது.
தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்த தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது 77 இல் நாடாளுமன்றத்துக்குச் சென்றதுடன் அரசியலுக்குள் நுழைந்தார். 2001 இல் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் கூட்டமைப்பு உருவானபோது - கட்டளைகளை ஏற்றுக்கொண்டு - அதன் நாடாளுமன்றக் குழுத்தலைவரானார். 2009 இல் போர் முடிந்த பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இனித் தமிழர்களின் தலைவிதி என்றமைந்தபோது, தமிழ் மக்களுக்காக சர்வதேசத்திடம் சிரிக்கவும் அழவும் இறைஞ்சவும் இரகசியம் பேசவும் அவர் காலத்தின் கைதியானார். ஆனால், அதனை அவர் பெருமையோடும் பொறுமையோடும் ஏற்றுக்கொண்டார்.
சிங்களத்துடனும் முஸ்லிம் மக்களுடனும் இந்தியாவுடனும் என்று சகலருடனும் - புலிகளின் காலத்தில் ஏற்பட்ட கசப்புக்களிலிருந்து தமிழர் அரசியலை மீட்டுப் புதிய பாதை வகுப்பதற்கு - நல்லிணக்கப் பாலங்களைக் கட்டத் தொடங்கினார். அதற்காகச் சுமந்திரனையும் சேர்த்துக்கொண்டு அக்கினி குண்டத்தில் வீழ்ந்தார். தமிழர்களது தூய உள்ளத்தை நிரூபிக்கப்போவதாக முரசறைந்தார். தான் முன்னெடுக்கும் சத்தியப் போராட்டத்துக்கு சத்தம் அதிகமாக இருக்கும் என்று நம்பினார். ஆனால், தமிழ் மக்களோ, பாகுபலி படம் ஓடி முடிந்த தியேட்டரில் பாக்யராஜ் படம் ஓடுவதைப் போல சம்பந்தரின் கருமங்களை அப்பாவித்தனமானவே பார்த்தார்கள்.
ஆனால், இன்று சம்பந்தரது அரசியல் பாதையை திரும்பிப் பார்த்தால், அவரது இடத்தில் அவரைவிட வேறு யார் இருந்திருந்தாலும் தமிழர் அரசியல் பயனுள்ள பாதையில் இம்மியளவேனும் அசைந்திருக்கும் என்பதாகவே தோன்றுகிறது.
2009 இற்குப் பின்னரான தமிழர் அரசியலில் சம்பந்தர் நினைத்ததுபோல எதனையும் அடைந்திருக்க முடியாது என்பது உண்மையே. கஜேந்திரனும் கஜேந்திரகுமாரும் குத்திமுறிவதைப்போல சம்பந்தர் ஜெனீவாவில் போய் நின்று கரும்புலியாக வெடித்து தமிழீழத்தைப் பெற்றுத்தரவேண்டும் என்று தமிழர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தமிழர்களை அடையவேண்டிய ஒற்றைப் பாதையாக சர்வதேசம் தொடர்ந்து அணுகியபடியிருந்த சம்பந்தர் - இடைப்பட்ட காலத்தில் - தமிழர் தேசத்தின் அபிவிருத்தியை - தேசக் கட்டுமானத்தை - நோக்கி வெளிநாடுகளை கொண்டுவருவதில் என்ன அக்கறை காட்டியிருந்தார். அல்லது, அரசியல் தீர்வு விடயத்தில் அவரது கைகளுக்கு சர்வதேசம் விலங்கிடிருந்த காலத்தில், தமிழ் மக்களுக்கான மாற்றீடாக எதை வேண்டினார்?
2015 இல் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியிலிருக்கும்போதுகூட, சிங்களத்தைச் சீண்டிவிடக்கூடாது என்று சிக்கனமாய் ஒளித்துவைத்த கடைசிக் காண்டீபங்களை, யாரிடம்தான் கொடுத்தார்?
அவரது கட்சியின் பெறுமதியும் தமிழ்க் கூட்டமைப்பின் இற்றை வரையான ஆயுளும் விடுதலைப்புலிகளினால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட ஆசீர்வாத்தினால் நீண்டுகொண்டிருப்பதே தவிர, அது சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தினால் அசைந்துகொண்டிருக்கும் சப்பறம் அல்ல. அவரது அரசியல் முடிவினால் 2009 இற்குப் பின்னர் இடம்பெற்ற ஒரே பெரிய நகர்வென்றால், விக்னேஸ்வரனை அரசியலுக்குள் கொண்டுவந்ததுதான். அந்தச் சட்னியினால் தமிழர்களின் இட்லி பட்டபாடு பற்றி இங்கொன்றும் எழுதி யாருக்கும் தெரியவேண்டியதில்லை.
சுமந்திரன் என்பவரது தெரிவுதான் முதலும் முடிவுமாக சம்பந்தர் எடுத்த உருப்படியான தீர்மானம். அதிலும், சுமந்திரன் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு தடையாக அவர் மேற்கொண்ட் பல முடிவுகளின் பலாபலன்களைத்தான் தமிழரசுக் கட்சி இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது. உருப்படியான அடுத்த தலைமுறையொன்றையும் மண்டை வளம்கொண்டவர்களையும் தேர்தல் அரசியலுக்குள் அனுமதிக்காமல், தேருக்குக் கட்டை போட்டதைப்போல சம்பந்தர் எடுத்த பல முடிவுகள், மாவையைப் போல பலருக்கு மாலைபோட்டது. ஏன், அவரே ஒரு கதிரையை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தார். விளைவு, போர்க்குற்ற விசாரணைக்காக சாட்சியங்களை சேகரிக்கப் புறப்பட்ட தமிழர் அரசியல், இன்று சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் எதிராக சாட்சிகளை வளைத்துக்கொண்டு நீதிமன்றங்களில் ஏறி இறங்குகிறது.
இன்னொரு வகையில் சொல்லப்போனால், 2009 இல் காவுகொடுக்கப்பட்ட தமிழர் அரசியலின் எஞ்சிய துண்டங்கள் - அதேபாணியில் - சம்பந்தரின் சாவில் பலியிடப்பட்டிருக்கின்றன.
ஒரு முதியவரின் சாவினை, ஒரு வயதுக்குப் பின்னர் "கண்ணீர் அஞ்சலி" என்றுகூட குறிப்பிடுவதில்லை. அந்த மறைவை "இதய அஞ்சலி" என்று மாத்திரம் குறிப்பிடுகின்ற பத்திரிகை நெறி ஒன்றுள்ளது. சம்பந்தரின் மறைவும் அவ்வாறான ஒன்றே. அதற்குமேல், அவர் விரும்பிய - அவர் அடையாத - எதையும் அவரது சாவு மீட்டுக்கொடுத்துவிடப்போவதுமில்லை. அதற்கு அவர் தகுதியானவரும் இல்லை.
எழுத்தாளர் எஸ்.பொ குறிப்பிட்டதைப்போல "வரலாற்றில் சத்தியத்தைப் பதிவு செய்ய முற்படும் நாம், சாவு மன்னிப்புச் சலுகையை நீட்டிமுழக்கி அதன் நிழலில் சத்தியங்களை மறைத்தால் அது வரலாற்றிற்குச் செய்யப்படும் துரோகம்”
சம்பந்தர் ஐயாவுக்கு இதய அஞ்சலிகள்!
Comments