தான் பிறந்த நிலம் பற்றி எழுதுவது என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கிடைக்கின்ற நித்தியப் பெருமிதம். அந்த எழுத்து தேர்ந்த இலக்கியப் பிரதியாகுவது என்பதெல்லாம் தமிழ் இலக்கியத்தில் எப்போதாவது அரிதாக நிகழ்வது. அந்தவகையில், இலங்கையிலிருந்து "கப்பித்தான்" என்ற செழிப்பான வரலாற்றுப் புனைவினை தந்திருக்கிறார் எஸ்.ஏ. உதயன்.

தொன்மம் குறித்த தேடல்களும் ஆய்வுகளும் கரிசனங்களும் இப்போதெல்லாம் பார்த்துப் பாராமல் பங்குபோடுகின்ற கலைச்சொற்களாக - zoom நிரப்பும் அரட்டைகளாக - வட்ஸ் அப் குதூகலங்களாக - மாறிவிட்ட சூழலில், அதற்குரிய வரலாற்று மதீப்பீட்டினை நேர்த்தியாக கையாள்வது என்பது, மிகச் சிறிய குழுமத்தினரிடம் சென்றுமே சென்று சேர்ந்துவிடுகிறது. முன்பும் இதே நிலையென்றாலும், இப்போது அந்த நிரை இன்னமும் குறுகியிருக்கிறது.
அந்தவகையில், தென்னிந்தியாவின் தூத்துக்குடியைச் சேர்ந்த பரதவ மக்கள், இலங்கையின் மன்னார் பிரதேசத்துக்குப் புலம்பெயர்ந்த பின்னணியையும் அவர்களது குடிபரம்பலையும் செறிவானதொரு நாவலாக தந்திருக்கிறார் கே.எஸ். உதயன். "கொற்கை" என்ற நாவலில் ஜோ.டி.குரூஸ் எவ்வாறு அப்பரதவ மக்களின் கொழும்புக்கான புலப்பெயர்வை எழுதியிருந்தாரோ, "கப்பித்தான்" நாவலில் கே.எஸ். உதயன் முற்றிலும் வேறானதொரு வாழ்க்கையைக் கதைப்படுத்தியிருக்கிறார்.
மதுரை நாயக்க மன்னனின் நிர்வாகத்தின் கீழான விஜயாபதி நகரின் பாளையக்காரன் ஆரியப்பெருமாள், தன் காதலியைக் கடத்திச் சென்றதற்காக, அவனைச் சிரச்சேதம் செய்து, காதலியை மீட்டுக்கொண்டு, மன்னாருக்குத் தனது படைத்தோழர்களுடன் ஓடிவருகின்ற பர்னாந்து என்ற பாத்திரத்தினை மையமாகக்கொண்டு, "கப்பித்தான்" நாவல் வளர்கிறது. அதன்பின்னர், பேசாலை என்ற நகர் எவ்வாறு தோற்றம் பெறுகிறது என்பதையும் அங்கு புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு இடையில் ஆரம்பிக்கப்படும் தொழில்கள், அவர்களது பண்பாடு, வழிபாடு, அவர்கள் அஞ்சவேண்டிய யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியனுக்குக் கீழான வாழ்க்கை முறை என்று பரந்துபட்ட தகவல்களோடு இந்த நாவல், தேர்ந்த கதைக்களத்திற்குள் இறங்கிவிடுகிறது.
ஆனால், இந்தியாவிலிருந்து தங்களோடு பிணைந்து வந்த "உடக்கு பாஸ்" என்ற கலை வடிவத்தினை மன்னாரில் காண்பிக்கவேண்டும் என்பதற்காக, பர்னாந்து மேற்கொள்ளும் முயற்சிகளும் அதற்கான சவால்களும்தான் நாவலின் மையமாகச் சூழல்கிறது. "உடக்கு பாஸ்" கலைவடிவத்தின் தோற்றுவாயும் அதன் வளர்ச்சியும் எவ்வாறு ஒரு சமூகத்திற்குள் ஆழக்கிளைவிடுகிறது என்பதை கே.எஸ். உதயன் நாவலில் மிக நேர்த்தியாகக் கொண்டுவந்திருக்கிறார்.
அதேவேளை, கடற்கரையோர மக்களின் அன்றாட வாழ்வும், அவர்களுடன் மதம் என்பது எவ்வளவு நெருக்கமாக வளர்கிறது என்பதையும் அவர்களது மொழியையும் "கப்பித்தான்" மிகச் செழிப்போடு பதிவு செய்திருக்கிறது. சாதிப்பிரிவுகளும், கொள்ளைநோயும், தனிப்பட்ட குரோதங்களும்கூட ஒரு கூட்டு வாழ்க்கை முறையை எவ்வாறெல்லாம் கூறுபோடுகின்றன என்பது முதல் பல சிக்கல்கள், இந்த நாவலுக்குள் எதிர்க்குரலாக ஒலிக்கின்றன. வட்டார வழக்குள் நாவலின் மூலை முடுக்கெங்கும் நுரைத்துப்போய் கிடப்பதாலோ என்னவோ, சம விகிதத்தில் எழுத்துப்பிழைகளும் விரவிப்போயிருக்கின்றன. அவ்வப்போது காரணமே இல்லாமல் மாறிவிடுகின்ற மொழி நடை, குறியீடுகள், எழுத்துப்பிழைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இந்நாவல் இன்னமும் செம்மை செய்யப்பட்டிருந்தால், கப்பித்தான் இதைவிடச் சிறப்பானதொரு பிரதியாக வெளிவந்திருக்கும். அடுத்தபதிப்பில், அக்குறைகளைத் தீரத்துக்கொண்டால் சேமம்.
댓글