top of page

சமனற்ற நீதி

ஈழத்தைப் பின்புலமாகக் கொண்டவர்களதும் ஈழத்தைக் கதைக்களமாகக் கொண்டவர்களதும் அபுனைவுகள் அண்மைக்காலமாக பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. மாத்திரமல்லாமல், விற்பனையிலும் ஆரோக்கியமான எண்களை எட்டியிருக்கின்றன. தமிழினியின் "கூர்வாளின் நிழலில்", அஜித் போயகொடவின் "நீண்ட காத்திருப்பு", ஈழத்திருநங்கை "தனுஜாவின் பயணமும் போராட்டமும்" போன்ற பிரதிகளின் வரிசையில், அண்மையில் வெளிவந்துள்ள ராஜ் ராஜரட்ணத்தின் "சமனற்ற நீதி" மிகவும் முக்கியமானது.

இந்த நூலை முழுமையாகத் தன்வரலாற்றுக்குறிப்பு என்று கூறிவிடமுடியாவிட்டாலும் இதன் பெறுமானம் மிகப்பெரியது.




ராஜ் ராஜரட்ணம், யாழ்ப்பாணத்தின் அல்வாயை பூர்வீகமாகக் கொண்டவர். கொழும்பில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி கற்று அமெரிக்காவுக்குச் சென்று, அங்கு பங்கு வர்த்தகத்துறையில் கோடீஸ்வரரானவர். 'கலியன்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, பல கோடிக்கணக்கான டொலர்களை நிர்வகிக்கும் - முதலீடு செய்யும் - வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியை மேற்கொண்டுவந்தவர். வருடத்துக்குப் பலகோடிகளைச் சம்பாதித்தவர். அதேபோல பல கோடிகளை, இலங்கை உட்பட பலநாடுகளிலுள்ள அமைப்புக்களுக்கு உதவிகளாக வழங்கியவர்.


2008 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின்போது அமெரிக்கா பாரதூரமாக அடிவாங்கியது. அமெரிக்காவில் பங்குவர்த்தகத்துறையில் மேற்கொள்ளப்பட்ட உட்தகவல் வாணிபமே (insider trading) இந்தப் பொருளாதாரச் சரிவுக்குக் காரணம் என்ற ஒரு போலிப்பரப்புரையை நிறுவுவதற்காக, பங்கு வர்த்தகத்தில் கொடிகட்டிப்பறந்துகொண்டிருந்த பலர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் கலியன் நிறுவன உரிமையாளர் ராஜ் ராஜரட்ணம். இவர் மற்றையவர்கள் போல் அல்லாமல் மிகப்பெரிய புள்ளி என்பதை அரசாங்கம் தெரிந்தேதான் திட்டமிட்டுக் கைது செய்கிறது.


வழக்கில் அப்ரூவராகச் சரணடைந்து - குற்றத்தைக் ஒப்புக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களினால் பலர் அரசாங்கத்திடம் அடைக்கலமாகிறார்கள். தங்களுடன் கைதானவர்களைக் காட்டிக்கொடுத்துத் தங்கள் மீது சரியவிருந்த பெரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கொள்கிறார்கள். அல்லது குறைந்தபட்ச தண்டனையைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், ராஜ் ராஜரட்ணம் அமெரிக்கச் சட்டத்துறையுடன் மோதுகிறார். எந்தக் குற்றமும் இழைக்காத தான், அரச அழுத்தத்திற்கு அடிபணியப்போவதில்லை என்று, தனது கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி, வல்லரசின் நீதிக்கட்டமைப்புக்கு எதிராகச் சட்டப்போர் தொடுக்கிறார்.


அரசாங்கமோ, ராஜ் ரட்ணத்தின் வட்டத்திலுள்ள ஒவ்வொருவரையும் அப்ரூவராக மாற்றி, தனது வலையில் வீழ்த்துகிறது. அப்ரூவர்களை ராஜ் ராஜரட்ணத்துடன் தொலைபேசித்தொடர்புகளை மேற்கொள்ளவைக்கும் FBI, சட்டவிரோதமாக உரையாடல்களைப் பதிவுசெய்து ஆதாரங்களை அறுவடைசெய்கிறது. இந்த அசிங்க நாடகத்தில், ராஜ் ராஜரட்ணத்தினால் பயன்பெற்றவர்கள், தொழிலில் முன்னேறியவர்கள், உற்ற நண்பர்கள் என்று ஏகப்பட்டவர்களின் வரிசையான துரோகத்தினால், அரசாங்கத்தின் வழக்கு மெருகேறுகிறது.


விளைவாக, 2011 ஆம் ஆண்டு, ராஜ் ராட்ணத்திற்கு 11 வருட சிறையும் 10 மில்லியன் டொலர் அபராதமும் 53 மில்லியன் டொலர்களை அவரிடமும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


சிறைக்குச் சென்ற ராஜ் ராஜரட்ணம் "Uneven Justice: The Plot to Sink Galleon" என்ற பெயரில் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பாக "சமனற்ற நீதி" என்ற நூல் தற்போது வெளியாகியுள்ளது.


நீதி என்பது மிகவும் புனிதப்படுத்தப்பட்டு, அதன்பொருட்டு நடைபெறும் அனைத்தும் - அதனால் விளையும் அனைத்தும் - கேள்விக்கு உட்படுத்தமுடியாதது என்றும் கேள்விக்கு உட்படுத்தக்கூடாதது என்றும் இந்த உலகம் நம்பவைக்கப்பட்டிருக்கிறது. கோயிலில் சிசிடிவி பூட்டி, கடவுளுக்கு காவல் வழங்குவதற்குக்கூட சிந்திக்கும் இந்த உலகம், தங்களை எந்நேரமும் தீண்டிவிடக்கூடிய நீதியின் மறுபக்கங்களை கேள்விக்கு உட்படுத்துவதற்கு ஒருபோதும் தயாரானதில்லை. நீதி என்ற இறுதிப்புகலிடம் இல்லாவிடின் இந்த உலகிற்கான பெறுமானம் அற்றுவிடும் என்பது உண்மைதான். ஆனால், அந்த நீதிக்கான சட்டத்தை உபயோகிப்பவர்கள், எல்லாவிதமான பலவீனங்களையும்கொண்ட நீதிபதிகள்தான். மேன்முறையீடு என்ற எணி எல்லாநேரங்களும் படிகளோடிருப்பதில்லை.


குறிப்பாக, ராஜ் ராஜரட்ணத்தின் விடயத்தில், அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட கணத்திலிருந்து - அதனை எதிர்த்து ராஜ் ராஜரட்ணம் திமிறிய கணத்திலிருந்து - இந்த வழக்கினை அரசுத் தரப்பு ராஜ் ராஜரட்ணதுக்கு எதிரான போட்டிக்களமாகவே பயன்படுத்த விளைகிறது. அத்துடன், இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட அத்தனை அரசு வழக்குரைஞர்களும் தங்களின் பதவி உயர்வுக்கான நட்சத்திர வழக்காக இதனை மாற்றி, வென்றுவிடுவதற்கு வெறிகொண்டு அலைகிறார்கள். நீதிபதிகூட அவசர அவசரமாகத் தீர்ப்பினை வழங்கி, ஓய்வுபெற்றுவிட்டு, தான் தொடங்கிய புதிய சட்ட நிறுவனத்திற்கான இலவச விளம்பரமாக இந்த வழக்கு தொடர்பாக பேட்டிகளைக் கொடுத்துக்கொண்டு திரிகிறார்.


அதுபோல, வெளிநாடுகளில் தெற்காசியர்கள் உயர் பதவிகளுக்கு வரும்போது, அவர்கள் தங்கள் இனத்தைச் சார்ந்தவர்களையே அதிகம் வேட்டையாடி, தங்களது பதவித்தூய்மையையும் அறிவுக்கூர்மையையும் அந்த நாட்டுக்கு உறுதிப்படுத்த விளைகிறார்கள். தாங்கள் பாரபரட்சமில்லாதவர்கள் என்று நெஞ்சைக் கிழித்துக்காட்டுவதற்கு, தங்களது சமூகத்தவர்களைப் பலிக்கடாவாக்குகிறார்கள். ராஜ் ரட்ணத்தின் ஒட்டுமொத்த வழக்கினையும் நாறடித்த ப்ரீத் பராரா என்ற இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரின் வரலாறு இதற்கு அரிய உதாரணம்.


மேற்கு நாடுகள் நீதியின் உறைவிடங்கள் என்பதுபோலவும் ஜனநாயக விழுமியங்கள் திரண்டு தொங்கும் போதி மரங்கள்போலவும் ஒரு பொதுவான விம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அங்குதான் நீதியின் பெயரில் அனைத்துக்குற்றங்களும் ஊற்றெடுக்கின்றன. அங்கிருந்துதான் வடிந்து மற்ற நாடுகளுக்குப் பரவுகின்றன என்பதற்கு ராஜ் ராஜரட்ணத்தின் வழக்கு தரமான சாட்சியம்.


சம காலத்தில் செயற்படுகின்ற நீதிமன்ற நடவடிக்கைகள், அதன் உப விளைவுகளாக அறிவிக்கப்படுகின்ற நீதி, அதன் ஆதாரமான சட்டங்கள் ஆகியவற்றை மூன்றாம் கண்கொண்டு பார்க்கவேண்டிய தேவையை "சமனற்ற நீதி" நூல் வரிக்கு வரி உணர்த்தியிருக்கிறது. ஒரு திகில் திரைப்படம் பார்த்துபோன்ற உணர்வைத்தருகின்ற இந்த நூல், வாசிப்பின் மீது மாத்திரமல்ல, சமூகத்தின் மீது அக்கறைகொண்டவர்கள் அனைவராலும் நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று.


இந்த நூலின் ஆங்கில வடிவத்துக்குச் சற்றும் குறையாத தரமும் நேர்த்தியான மொழிபெயர்ப்பும் நிறைந்த சொற்களால் பாராட்டப்படவேண்டியவை. மிகவும் சிக்கலானதொரு வழக்கையும் அதைவிடச் சிக்கலான பங்கு வர்த்தகம் என்ற துறையையும் தெளிவானதொரு நூலாக உருவாக்கியிருப்பது, தமிழுக்குக் கிடைத்துள்ள பெரு வரம்.

Comments


  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page